சஞ்சய் சிங்கின் காவல் அக்டோபர் 13 வரை நீட்டிப்பு..!
டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கை அக்டோபர் 13-ம் தேதி வரை காவலில் வைக்க ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் 5 நாள் காவல் இன்று செவ்வாய்க்கிழமை (10 அக்டோபர் 2023) முடிவடைந்த நிலையில் மீண்டும் சஞ்சய் சிங்கை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று பிற்பகலில் ஆஜர்படுத்தியது. அப்போது நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில், விசாரணைக்கு சஞ்சய் சிங் ஒத்துழைக்கவில்லை என்றும் பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. அழைப்பு தரவு பதிவுகள் மற்றும் பழைய தொலைபேசி கூட மீட்கப்படவில்லை.
சஞ்சய் சிங் தனது பழைய போன் பற்றி கூறவில்லை என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, சஞ்சய் சிங்கை மேலும் 5 நாட்கள் சஞ்சய் சிங்கை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீதிமன்றம் சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை 5 நாள்கள் விசாரிக்க அனுமதி வழங்க முடியாது எனவும் மூன்று நாட்கள் காவலில் வைத்தது மட்டும் விசாரிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தது.
சஞ்சய் சிங் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது இரண்டு நெருங்கிய கூட்டாளிகளான சர்வேஷ் மிஸ்ரா மற்றும் விவேக் தியாகியிடமும் அமலாக்கத்துறைவிசாரணை நடத்தியது. இதுமட்டுமின்றி, தினேஷ் அரோராவையும், சஞ்சய் சிங்கையும் நேருக்கு நேர் உட்கார வைத்து விசாரணை நடத்தினர். சர்வேஷ் மிஸ்ரா மூலம் சஞ்சய் சிங்கிற்கு ரூ.2 கோடி வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலால் கொள்கை வழக்கில் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக சஞ்சய் சிங் அவரது வீட்டில் சோதனைகளைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.