மெட்டா இந்தியாவின் துணைத் தலைவராக சந்தியா தேவநாதன், நியமிப்பு- மெட்டா
மெட்டா இந்தியாவின் துணைத் தலைவராக சந்தியா தேவநாதன், நியமிக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
மெட்டா இந்தியாவின் துணைத் தலைவராக சந்தியா தேவநாதன், நியமிக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா இன்று அறிவித்துள்ளது. மெட்டாவின் நீண்டகால வளர்ச்சிக்கும் இந்தியாவிற்கான அர்ப்பணிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் சந்தியா தேவநாதன், நிறுவனத்தின் வணிகம் மற்றும் வருவாய் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துவார்.
மெட்டாவின் தலைவராக இருந்த அஜித் மோகன்,கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்டாவின் போட்டி நிறுவனமான ஸ்னாப் இன்க் நிறுவனத்தில் சேர விலகியதை அடுத்து சந்தியா தேவநாதன் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
வாட்ஸ்அப்பின் இந்தியத் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் இந்தியாவில் உள்ள மெட்டா பிளாட்ஃபார்ம்ஸின் பொதுக் கொள்கை இயக்குநர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் 2 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தனர். சந்தியா தேவநாதன் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தனது புதிய பதவிக்கு மாறுவார்.
சந்தியாவின் நியமனம் குறித்து, மெட்டாவின் தலைமை வணிக அதிகாரி மார்னே லெவின் கூறுகையில், “டிஜிட்டல் முன்னேற்றத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது, மேலும் மெட்டா நிறுவனம் ரீல்ஸ் மற்றும் பிசினஸ் மெசேஜிங் போன்ற பல சிறந்த தயாரிப்புகளை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் எங்கள் முதல் ஷாப்பிங் அனுபவமான வாட்ஸ்அப்பில் ஜியோமார்ட்டை சமீபத்தில் அறிமுகப்படுத்தியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தியாவின் புதிய தலைவராக சந்தியாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.
வங்கி, தொழில்நுட்பம் ஆகியவற்றில் 22 வருட அனுபவம் கொண்ட சந்தியா தேவநாதன் 2016 முதல் மெட்டாவில் இருந்து வருகிறார்.