வழிகாட்டுதல் இல்லாமல் மருந்து விற்பனை.! அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..!
சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ததற்காக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் உரிமம் இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ததற்காக, அமேசான், பிளிப்கார்ட் மற்றும் டாடா 1எம்ஜி உள்ளிட்ட 20 இ-ஃபார்மசிகளுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சோமானி, (டிசிஜிஐ) ஷோ-காஸ் நோட்டீஸ் (show-cause notice) அனுப்பியுள்ளார். மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை மீறியதால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் இந்நிறுவனங்கள் சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் உரிமம் இல்லாமல் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்வது மருந்துகளின் தரத்தை பாதிக்கும் மற்றும் தவறான பயன்பாடு காரணமாக பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று சோமானி கூறினார்.
இதனையடுத்து இ-ஃபார்மசிகளுக்கு பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இரண்டு நாட்களுக்குள் நிறுவனங்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் டிசிஜிஐ ஜெனரல் சோமானி எச்சரித்தார்.