முதல்வராகும்?? பைலட்!?? கதகதக்கும் ராஜஸ்தான் களம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள துணை முதல்வர் சச்சின் பைலட் பா.ஜக ஆதரவுடன் முதல்வராக திட்டமிட்டு காய் நகர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி மேலிடம் முதல்வர் பதவி கொடுக்காததால், அசோக் கெலாட் தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு, தொடர்ந்து பைலட் முயற்சித்து வருவதாகவும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து, பா.ஜ., தலைவர்களுடன் இது குறித்து ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராஜஸ்தான் அரசியல் வட்டார தகவல்கள் கூறுகிறது.மேலும் பைலட் தனக்கு, 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாக கூறி அரசியல் ஆட்டத்தை ஆடி வருகிறார்.
பா.ஜக கட்சியில் இணைவது, பைலட்டின் திட்டமல்ல. அதற்குப் பதிலாக, பா.ஜக ஆதரவுடன் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்பதே, அவரது திட்டமாம். ஆனால் இவ்விவகாரத்தில் பா.ஜக., தலைவர்கள் இடையே சற்று தயங்கம் காணப்படுவதாக பாஜக வட்டார தகவலும் வந்து சேருகின்றது.ஆனாலும் தொடர்ந்து, பா.ஜக தலைவர்கள் உடன் பைலட் பேச்சு நடத்தி வருவதாகவும் இதற்காக டில்லியில் தன் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து முகாமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.
மேலும் பா.ஜகவில் இணைய சம்மதித்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேசலாம்’ என்று பைலட்டிடன் பா.ஜ., தலைவர்கள் தரப்பில், கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் ராஜஸ்தான் அரசியல் களம் பாலைவனத்தை விட வெப்பம் மிகுந்து காணப்படுகிறது.