#RupeevsDollar: மத்திய நிதியமைச்சர் கூறியது முற்றிலும் உண்மை – ப.சிதம்பரம்
இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை, அமெரிக்க டாலர் மதிப்புதான் உயர்கிறது என நிதியமைச்சர் கூறியது உண்மை என ப.சிதம்பரம் விமர்சனம்.
சமீப நாட்களாக இந்திய ரூபாயின் மதிப்பு கண்டு வீழ்ச்சி அடைந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை, அமெரிக்க டாலரின் மதிப்புதான் தொடர்ந்து உயர்ந்து வருவதாக பார்க்கிறேன். அனைத்து நாட்டு பணத்தை ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.69 என்றளவிற்கு குறைந்துள்ள நிலையில் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றும் அமெரிக்க டாலர் மதிப்பானது சர்வதேச சந்தையில் வலுவான நிலையில் உள்ளதால் மற்ற அனைத்து நாடுகளின் நாணயங்களும் அதற்கு எதிராகவே செயல்படுகின்றன எனவும் கூறியிருந்தார். நிதியமைச்சரின் கருத்தை அரசியல் தலைவர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரே தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். இதன்பின் பேசிய அவர், இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை. அமெரிக்க டாலர் மதிப்புதான் உயர்கிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது முற்றிலும் உண்மை. தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளரோ/ கட்சியோ, ’நாங்கள் தேர்தலில் தோற்கவில்லை. அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளார்கள்’ என்று தானே எப்போதுமே கூறுவார்கள் என விமர்சித்தார்.