காஷ்மீர் மக்கள் தேசத்துடன் ஒன்றிணைய அரசியல்சாசனத்த திருத்த சொல்லும் RSS THALAIVAR

Default Image

தேசத்தின் மற்ற பகுதிகளுடன் காஷ்மீர் மக்கள் ஒன்றிணைவதற்கு அரசியல்சாசனத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்பதையே அவர் இவ்வாறு சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அந்த அமைப்பின் வருடாந்திர தசரா விழா சனிக்கிழமை நடைபெற்றது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில் மோகன் பாகவத் பேசியதாவது:
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியுள்ள அகதிகள் பிரச்னையை நாம் ஏற்கெனவே சந்தித்து வருகிறோம். தற்போது மியான்மரில் இருந்து ரோஹிங்கயா அகதிகள் இங்கு ஊடுருவியுள்ளனர். அவர்களுக்கு அடைக்கலம் தருவதால் நமது வேலைவாய்ப்புகளில் நெருக்கடியை அளிப்பதோடு தேசியப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ரோஹிங்கயா அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பான எந்த முடிவும் தேசியப் பாதுகாப்பை மனதில் கொண்டே எடுக்கப்பட வேண்டும்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்னைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. காஷ்மீர் தொடர்பாக அரசியல்சாசனத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அந்த மாநிலம் சம்பந்தப்பட்ட பழைய ஷரத்துகள் மாற்றப்பட வேண்டும். அரசியல்சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டால் மட்டுமே ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் முழுமையாக ஒன்றிணைய முடியும்.
பசுப் பாதுகாவலர்களால் சிலர் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது. அதே வேளையில் பசுக்களைக் கடத்துபவர்கள் பலரையும் கொன்றுள்ளனர். பசுக்களைக் காப்பது என்பது
மதங்களுக்கு அப்பாற்பட்டதாகும். பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்களைப் போல், பல்வேறு முஸ்லிம்களும் பசுக்களைக் காப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, சிறு, நடுத்தரத் தொழிலகங்களும், சுயவேலைவாய்ப்பை அளிக்கும் வர்த்தகங்களும் காக்கப்பட வேண்டும். ஏனெனில் அவை பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கின்றன.
விவசாயிகள் பிரச்னை: தங்கள் குடும்பங்களுக்கு மட்டுமின்றி நாட்டுக்கே உணவளிக்கும் நமது விவசாயிகள் தற்போது துன்பத்தில் உள்ளனர். அவர்கள், வெள்ளம் மற்றும் வறட்சி, அரசின் ஏற்றுமதி – இறக்குமதிக் கொள்கை, விளைபொருட்களுக்கு குறைந்த விலை, அதிகரிக்கும் கடன்கள், பயிர்ச்சேதத்தால் அனைத்தும் இழப்பது ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடன் தள்ளுபடி போன்ற அரசின் நடவடிக்கைகள் தாற்காலிகமானவையே தவிர, விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வல்ல.
மும்பையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். அவர்களது குடும்பத்தாருக்கும், அச்சம்பவத்தில் காயமடைந்தோருக்கும் அனுதாபங்கள் என்று மோகன் பாகவத் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்