RSS விவகாரம்.. தவறை திருத்தி கொள்ள 50 ஆண்டுகள் ஆகிவிட்டது.! ம.பி உயர்நீதிமன்றம் கருத்து.!
மத்திய பிரதேசம் : ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்) எனும் இந்துத்துவா அமைப்பில் மத்திய அரசு ஊழியர்கள் உறுப்பினராக இணைந்து பணியாற்ற கூடாது என 1966ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தடையை அண்மையில் மத்திய அரசு நீக்கியது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த ஆர்எஸ்எஸ் தடை விவகாரம் குறித்து முன்னதாக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் கடந்த 2023இல் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் புருஷோத்தம் குப்தா என்பவர்,1966 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு பிறப்பித்த RSS இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேரக்கூடாது என வித்திட்ட உத்தரவுக்கு எதிராக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை மத்திய பிரதேச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் சுஷ்ருதா அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், மத்திய அரசு தனது தவறை உணர கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்கள் (50 ஆண்டுகள்) ஆகிவிட்டது. ஆர்எஸ்எஸ் போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற அமைப்பு, நாட்டின் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் ஒன்றாக தவறாக இடம் பெற்றுள்ளது.
அந்த பட்டியலில் இருந்து அதை அகற்றுவது மிக முக்கியமான ஒன்று என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த இயக்கத்தில் சேர்ந்து பல வழிகளில் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பல மத்திய அரசு ஊழியர்களிடம் உள்ளது. இந்த ஆசைகள் இந்த ஐந்து தசாப்தங்களுக்கு பிறகு தற்போது நனவாகியுள்ளது என நீதிபதிகள் கூறினர்.
ஏற்கனவே RSS இயக்கத்தில் மத்திய அரசு ஊழியர்கள் சேர இருந்த தடை நீக்கப்பட்டு விட்டதால் மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.