ரூ.9000 கோடி மோசடி …!விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய வங்கிகள் பலவற்றில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பை டிசம்பர் 10 ஆம் தேதி நீதிமன்றம் வழங்கியது.
பின் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு விஜய் மல்லையாவை அனுப்ப பிரிட்டன் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
பின் வங்கி கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா தப்பி ஓடிய குற்றவாளி என டெல்லி பொருளாதார சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. பொருளாதார குற்றவாளி என்பதால், மல்லையாவின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.