டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50,000 நிதியுதவி…! – டெல்லி முதல்வர்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,63,533 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4,329 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியைப் பொறுத்தவரையில், அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கணவர் இறந்தால் மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். மனைவி இறந்தால் அது கணவனுக்கு வழங்கப்படும். திருமணமாகாத ஒருவர் இருந்தால் பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்றும், தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே பொறுப்பு ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார். டெல்லியைப் பொறுத்தவரையில் இதுவரையில் 22,111 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.