வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.!
வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான அறிவிப்புகளை கடந்த இரு தினங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். இதில், இன்று சுயசார்பு திட்டத்திற்கான 3ம் கட்ட அறிவிப்பில், விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட 11 துறைகளுக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. குறிப்பாக வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வெங்காயம், தக்காளி, பருப்புகள், எண்ணெய் வகைகள் போன்றவற்றின் விலைகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கம் செய்துள்ளது.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வெங்காயம், பருப்பு மற்றும் எண்ணெய் வகைகள் போன்றவை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து நீக்கப்படுகின்றன. இந்த பொருட்களுக்கான இருப்புகளுக்கான அதிகபட்ச வரம்பு தளர்த்தப்படும் என்றும் கூறியுள்ளனர். உபரியாக இருக்கின்ற சந்தையில் இருந்து பற்றாக்குறை உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு 50% மானியம் என்றும் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள் சேமிப்புக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விவசாய பொருட்களை ஆன்லைனில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.