விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம் அறிமுகம்..!

Default Image

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதிகளை பிரித்து கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் 2–ந்தேதி புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் 29–வது மாநிலமாக உதயமான தெலுங்கானாவின் முதல் முதல்–மந்திரியாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர் ராவ் பதவி வகித்து வருகிறார்.

இந்த மாநிலம் உதயமான 4–வது ஆண்டு தினம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

செகந்திராபாத் அணிவகுப்பு மைதானத்தில் மாநில அரசு சார்பில் காலையில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் முதல்–மந்திரி சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் மாநில அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். மேலும் பல புதிய திட்டங்களை அறிவித்தும் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

தெலுங்கானாவை, தங்க தெலுங்கானாவாக மாற்றும் லட்சியத்தை நிறைவேற்றும் நோக்கில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் விவசாயத்தை இலாபம் தரும் தொழிலாக மாற்றவும், விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதுடன், விவசாயிகளின் டிராக்டருக்கான சாலை வரியும் ரத்து செய்யப்பட்டது. முந்தைய ஆட்சிக்காலங்களில் புறக்கணிக்கப்பட்டு இருந்த நீர்ப்பாசனத்துறை, தற்போது கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

மாநில விவசாயிகளுக்கு மற்றுமொரு சிறப்பு திட்டமாக ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு திட்டம் தொடங்கப்படும். எல்.ஐ.சி.யுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கான பிரிமியத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டத்தில் இணைக்கப்படும் விவசாயி இறந்து விட்டால், 10 நாட்களுக்குள் அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

மாநில அரசு செயல்படுத்தி வரும் ‘கல்யாண லட்சுமி’, ‘ஷாதி முபாரக்’ திட்டங்கள் மூலம் ஏழை பெண்களின் திருமணத்துக்கு தலா ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. பீடி தொழிலாளர்களுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

தெலுங்கானாவில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய வளர்ச்சி திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இவ்வாறு சந்திரசேகர் ராவ் கூறினார்.

இந்த நிகழ்வில், தனது 4 ஆண்டுகால ஆட்சியின் முன்னேற்ற அறிக்கையையும் அவர் வெளியிட்டார். முன்னதாக அவர் தெலுங்கானா பிரிவினை போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களுக்காக கட்டப்பப்பட்டு உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பஞ்சாரா ஹில்சில் அமைந்துள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில உள்துறை மந்திரி நயினி நரசிம்ம ரெட்டி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதைப்போல பல்வேறு மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் மந்திரிகள் பங்கேற்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தனர்.

இதற்கிடையே தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘தெலுங்கானா மாநில மக்களின் கனவுகளும், விருப்பங்களும் வருகிற ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்