4 விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.45 லட்சம் – ஏடிஜிபி பிரசாந்த் குமார்..!
நேற்று உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ. 45 லட்சம் அரசு வேலை வழங்கப்படும் என ஏடிஜிபி பிரசாந்த் குமார் கூறினார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்த போராட்டத்தை உத்திரபிரதேசம் லக்கிம்பூரை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். நேற்று லக்கிம்பூரில் நடந்த நிகழ்ச்சி பங்கேற்க அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக கூறப்பட்டது. இதனால், துணை முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், விவசாயிகள் உயிரிழப்பிற்கு பலர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த, லக்கிம்பூர் கெரியில் நேற்று உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ. 45 லட்சம் அரசு வேலை வழங்கும். காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று ஏடிஜிபி (சட்டம் & ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்தார். விவசாயிகளின் புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்படும்.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பார் என தெரிவித்தார். மேலும், சிஆர்பிசி பிரிவு 144 அமலில் இருப்பதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாவட்டத்திற்கு வர அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள் இங்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வழக்கில் எந்த குற்றவாளியும் காப்பாற்றப்பட மாட்டார். தற்போது, இறுதி சடங்குகள் நடைபெற்று வருகின்றன என்று ஏடிஜிபி (சட்டம் & ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறினார்.