நதிகளை மீட்போம் இயக்கத்தின் உதவியுடன் வாகாரி நதியை புத்துயிரூட்ட ரூ.415 கோடி நிதி ஒதுக்கீடு!!

Default Image

ஈஷா அறக்கட்டளையின் நதிகளை மீட்போம் இயக்கத்தின் உதவியுடன் வாகாரி நதியை புத்துயிரூட்டும் திட்டத்துக்கு மஹாராஷ்ட்ரா மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி ரூ.415 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த நதிகளை மீட்போம் இயக்க உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவையும் அமைத்துள்ளது.

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகம் நிகழும் யவத்மால் பகுதியில் உள்ள வாகாரி நதியை புத்துயிரூட்டுவதற்கு ஈஷா அறக்கட்டளையின் நதிகளை மீட்போம் இயக்கத்துடன் மஹாராஷ்ட்ரா மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், நதிகளை மீட்போம் இயக்க நிபுணர் குழுவினர் வாகாரி நதியை மீட்டு புத்துயிரூட்டுவதற்காக ஒரு விரிவான செயல் திட்ட அறிக்கையை தயாரித்து மஹாராஷ்ட்ரா மாநில அரசிடம் வழங்கினர்.
இந்நிலையில், இந்த திட்டத்துக்கு மஹாராஷ்ட்ரா மாநில அமைச்சரவை கடந்த 5-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. மேலும், இத்திட்டத்தை நதிகளை மீட்போம் இயக்கத்தின் உதவியுடன் செயல்படுத்துவதற்காக அம்மாநில வேளாண் அமைச்சகத்துக்கு ரூ.415 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அத்துடன் இதற்காக, நதிகளை மீட்போம் இயக்க உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல், நதிக் கரையோரங்களில் இரு புறங்களிலும் மரம் நடுதல், நதிக்கரையோர விவசாயிகளிடத்தில் தங்களின் நிலங்களில் மண்வளத்தை அதிகரிக்கும் விதமாக ரசாயன விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறி, மரப்பயிர் வகை விவசாயத்தை மேற்கொள்வதற்கு வழிகாட்டுதல், தோட்டக்கலை விவசாயம், பழ மரங்கள் மற்றும் மருத்துவ குணமிக்க மூலிகை மரப்பயிர் சாகுபடி, நுண்நீர் பாசன பயன்பாட்டுக்கான வழிமுறைகள், அரசாங்க நிலங்களில் பொதுமக்களின் மாபெரும் அளவிலான பங்களிப்போடு காடுகள் உருவாக்க திட்டம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் விவசாய பொருட்கள் உற்பத்தியை சிறப்பாக்கி சந்தைப்படுத்துவதற்கு துணை நிற்கும் வகையில் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

Image result for வாகாரி நதி

இது தொடர்பாக  ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ்  பேசியபோது, “இந்தியாவில் வருத்தம் தரும் வகையில் அதிகப்படியான விவசாய தற்கொலைகள் அரங்கேறும் யவத்மால் பகுதியில் வாகாரி நதி புத்துயிராக்க திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் மகாராஷ்டிர அரசாங்கம் காட்டிய வேகமும் அர்ப்பணிப்பும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் திட்டம் நதியையும் நதியை சுற்றியுள்ள பல்லுயிர் சூழல் மண்டலத்தையும் மேம்படுத்துவதை மட்டும் குறிக்கோளாக கொண்டிராமல், விவசாயிகளின் வருமானத்தை பன்மடங்கு பெருக்கி அதன்மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கும் உத்வேகம் தருவதாக இருக்கும். வலுவான பொருளாதார முன்னேற்றத்திற்கான நீடித்த நிலைத்த விவசாய முறைக்கு ஒரு முன்மாதிரியாக இதனை நம் நாட்டிலும் இந்த உலகிலும் விளங்கச் செய்வதற்கு நாம் விரும்புகிறோம்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ்  கூறினார்.

மேலும், இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ்  அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”நதிகள் மீட்பு இயக்கத்தின் பரிந்துரைப்படி வகாரி நதிக்கு புத்துயிரூட்டும் திட்டத்தை மகாராஷ்டிரா அமைச்சரவை ஏற்றுக்கொண்டிருப்பது ஒரு புதிய மைல்கல். சுற்றுச்சூழலும் பொருளாதாரமும் ஒருங்கே மேம்படமுடியும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இது உருவெடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

நதிகளை மீட்போம் இயக்கம்:

’நதிகளை மீட்போம்’ என்னும் தேசிய அளவிலான இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். வறண்டு வரும் இந்திய நதிகள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்துவதும், அவற்றை மீட்பதற்கு முழுமையான மற்றும் விரிவான திட்டத்தை உருவாக்குவதும் இந்த இயக்கத்தின் பிரதான நோக்கங்கள் ஆகும்.

இதற்காக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ்  அவர்கள் 9,300 கி.மீ தானே கார் ஓட்டி சென்று நதிகள் மீட்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, ஒரே மாதத்தில் 16 மாநிலங்களுக்கு சென்று 23 முக்கிய நகரங்களில் 180 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிகளில் 13 மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், வணிகத் தலைவர்கள், விளையாட்டு மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அத்துடன் உலக வரலாற்றில் முதல் முறையாக ‘நதிகளை மீட்போம்’ என்ற மாபெரும் சுற்றுச்சூழல் இயக்கத்துக்கு சுமார் 16.2 கோடி மக்கள் ‘மிஸ்டு கால்’ மூலம் ஆதரவு அளித்தனர்.

இந்த இயக்கத்தின் முயற்சிகளால் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள், கள விழிப்புணர்வுகள் மூலம் நதிகள் மீட்பு குறித்த விழிப்புணர்வு கோடிக்கணக்கான பொதுமக்களை சென்று சேர்ந்தது. ஊடகங்கள், சமூக நல அமைப்புகள், வணிக நிறுவனங்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசியல் தலைவர்கள் என பலத் தரப்பினரும் இந்த விழிப்புணர்வு பயணத்தில் பங்கெடுத்தனர்.

இதையடுத்து, இந்திய நதிகளை மீட்பதற்கான வழிமுறைகள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து ‘நிதி ஆயோக்’ அமைப்பிடம் வழங்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நிதி ஆயோக் அமைப்பு அதை அமல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் 2018 ஜூன் 6-ம் தேதி பரிந்துரை அளித்தது.

இதன்பிறகு, பல்வேறு மாநில அரசுகள் ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. திறமையும் ஆர்வமும் மிகுந்த 100 இளைஞர்கள் ‘நதிகளை மீட்போம்’இயக்கத்தில் முழு நேர தன்னார்வ தொண்டர்களாக இணைந்துள்ளனர். அவர்கள் நாடு முழுவதும் பயணித்து இத்திட்டத்தில் களப் பணியாற்றி வருகின்றனர்.

முதல்கட்டமாக, மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகம் நிகழும் விதர்பா மண்டலத்தில் உள்ள ’ ‘வாகாரி’ என்ற நதியை மீட்டு புத்துயிர் ஊட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்