ஜொமேட்டோ, ஸ்விக்கி தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் காப்பீடு..! கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு..!
இ-காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி பணியாளர்களாக வேலை செய்பவர்களுக்கு ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை கூட்டத்தொடரில் அம்மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை முதல்வரும், நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, 2013 முதல் 2018 வரை 6 பட்ஜெட்டுகளை அவர் முதல்வராக இருந்தபொழுது தாக்கல் செய்துள்ளார். இது அவரது ஏழாவது பட்ஜெட் ஆகும்.
இந்த பட்ஜெட்டில் அமேசான், ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி பணியாளர்களாக பணியாற்றும் கிக் தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தொகையில் ஆயுள் காப்பீடாக ரூ.2 லட்சமும், விபத்துக் காப்பீடாக ரூ.2 லட்சமும் அடங்கும். இன்சூரன்ஸ் பிரீமியத் தொகை முழுவதையும் மாநில அரசே ஏற்கும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.