பள்ளி படிப்பை முடித்தால் ரூ.25.000..! பட்டப்படிப்பை முடித்தால் ரூ.50,000…! – பீகார் அரசு
பள்ளிப்படிப்பு முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிப்பு.
பீகாரில் மாநிலத்தில், முக்கிய மந்திரி கன்யா உத்தன் யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், திருமணமாகாத பெண்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது. இத்திட்டத்தின் மூலம், பெண் குழந்தைகள் திருமணத்தை தவிர்க்கவும் பெண்களின் உயர் கல்வியை ஊக்கப்படுத்த வண்ணமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி பள்ளிப் படிப்பை நிறைவுசெய்த பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பை நிறைவு செய்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2021-22 ஆம் ஆண்டில் திருமணமாகாத பெண்களுக்கு வழங்கும், கல்வி உதவித் தொகையை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசு அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அந்த அறிவிப்பின்படி, பள்ளிப்படிப்பு முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என பீகார் மாநில அமைச்சரவை, கல்வித்துறையின் மசோதாவிற்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தால், அம்மாநிலத்தை சேர்ந்த 1.6 கோடி பெண்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.