விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் கோடி – பிரதமர் மோடி
விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் இதுவரை ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேச்சு.
குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள ஆல்பாட்டில் அரசின் நலத்திட்ட பயனாளிகளின் இடையே காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். குஜராத்தைச் சேர்ந்த 60 லட்சம் விவசாயிகளும், சூரத்தில் இருந்து கிட்டத்தட்ட 1.25 லட்சம் விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் பலனைப் பெற்றுள்ளனர். மத்திய அரசின் முந்தைய அரசுகள் பல வாக்குறுதிகளை அளித்தாலும் விவசாயிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், எங்கள் அரசாங்கத்திற்கு விவசாயிகளின் நலன்களுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு. அதனால் தான் நாட்டிலும், குஜராத்திலும் உள்ள விவசாயிகள் எங்களுக்கு தங்கள் ஆதரவுகளை வழங்குகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இதன்பின் பேசிய அவர், இயற்கை விவசாயத்திற்கு மாறவேண்டும் என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர், இதனால் குறைந்த செலவில் சிறந்த மகசூல் கிடைக்கும் என்றார். கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகளுக்காக நாடு முழுவதும் மூன்று கோடி வீடுகள் அரசால் கட்டப்பட்டுள்ளன.
இதில் குஜராத்தில் மட்டும் 10 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. குஜராத்தில் கிராமப்புற பகுதிகளிலுள்ள வீடுகளில் 97 சதவீத வீடுகளுக்கு குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தி தரப்பட்டதாகவும் கூறினார். மேலும், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. இது சாதாரண சாதனையல்ல. ஒவ்வொரு இந்தியனும் அதை நினைத்து பெருமை கொள்கிறான். இந்த உற்சாகத்தை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.