விவசாயத்திற்கு ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கீடு.! மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு.!
பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய 7 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய துறைகளின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதில், விவசாயத்திற்கு மட்டுமே சுமார் ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவுபெற்ற பிறகு, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார். விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு சுமார் ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், ” இந்த அமைச்சரவை கூட்டத்தில், விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புகுத்துவது, உணவு பாதுகாப்பு, விவசாயம் சார்ந்த கல்வி மற்றும் விவசாய பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை மையப்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாய பணிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை புகுத்தும் நடவடிக்கைகளுக்கு ரூ.2,817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2047ஆம் ஆண்டிற்குள் நமது விவசாயிகளை பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு பயிர் அறிவியலுக்காக ரூ.3,979 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறை வளர்ச்சிக்காக ரூ.860 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிரிஷ் விக்யான் கேந்திரா திட்டத்திற்கு 1,202 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை வள மேலாண்மைக்கு ரூ.1,115 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் அதன் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு ரூ.1,702 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் கல்வி, மேலாண்மை துறையை பலப்படுத்த ரூ.2,291 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.18,036 கோடி செலவில் புதிய ரயில் பாதை திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில்பாதை திட்டம் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள ஆறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வே வழித்தடம் மேலும் 309 கி.மீ தூரம் வரையில் அதிகரிக்கும்.” என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.