ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1,100 கோடி செலவு – அறக்கட்டளையின் பொருளாளர்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான ரூ.1,100 கோடி செலவாகும் என்று ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கூறியுள்ளார்.
ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோயிலின் முழு கட்டுமானமும் மூன்றரை ஆண்டுகளில் நிறைவடையும் என்று கூறியுள்ளார். ராமர் கோயில் மட்டும் கட்டுவதற்கு ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி என்றும் கோவில் முழு வளாகமும் கட்ட ரூ.1,100 கோடிக்கும் குறையாது எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது, கட்டமைப்பு வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்கள் கோயிலின் அஸ்திவாரத்திற்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர். பம்பாய், டெல்லி, சென்னை, கவுகாத்தி, மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், ரூர்க்கி, மற்றும் எல் அண்ட் டி மற்றும் டாடா குழுமங்களைச் சேர்ந்த சிறப்பு பொறியியலாளர்கள்,இந்த வளாகத்தின் வலுவான அடித்தளத்திற்கான திட்டத்தை வகுத்து வருகிறார்கள்.
இந்த மையம் அமைத்துள்ள ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு இதுவரை ஆன்லைனில் ரூ.100 கோடிக்கும் அதிகமான நன்கொடைகள் கிடைத்துள்ளன. ராமர் கோயில் கட்டுமானத்திற்காக வெகுஜன தொடர்பு மற்றும் நிதி பங்களிப்பு பிரச்சாரத்தை தொடங்குவதாக அறக்கட்டளை அறிவித்துள்ளது. விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) தொழிலாளர்கள் ஜனவரி 15 முதல் குஜராத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று கோயில் கட்டுவதற்காக நிதி சேகரிக்க உள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 27 வரை கர்நாடகாவில் வீடு வீடாக நிதி திரட்டும் பணியைத் தொடங்க ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை நியமித்துள்ளது. நிதி சேகரிப்பின் ஒரு பகுதியாக 5.23 லட்சம் கிராமங்களில் வாழும் 65 கோடி இந்துக்களை தொடர்பு கொள்ள நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் தன்னார்வலர்களை தனது அமைப்பு நியமிக்கும் என்று வி.எச்.பி இணை பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் தெரிவித்தார்.
இந்த நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80 ஜி கீழ் விலக்கு அளிக்கப்படும். கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியிருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி, உச்சநீதிமன்றம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பிரச்சினையை தீர்த்து வைத்ததுடன், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்தது. பாபர் மசூதி கட்டுவதற்கு மாற்று இடம் ஐந்து ஏக்கர் வழங்கி தீர்ப்பளித்தது.