பொது இடங்களில் ‘முகக்கவசம்’ அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் – அரசு அதிரடி உத்தரவு!
ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,அனைத்து வகையான பேரணிகள்,பொதுக் கூட்டங்களுக்கு தடை மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில்,ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா தொற்றும் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது.இதன்காரணமாக,உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியது.
மேலும்,இரவு நேர ஊரடங்கு,பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.அந்த வகையில்,டெல்லி,கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.
குறிப்பாக,பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசுகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,ஜனவரி 10 ஆம் தேதி வரை அனைத்து வகையான பேரணிகள்,பொதுக் கூட்டங்களுக்கு தடை மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.அபராதம் விதிப்பது உள்ளிட்டவை தொடர்பாக காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு வழங்கியுள்ளது.
மேலும்,பொது இடங்களில் முகக்கவசம்,சமூக இடைவெளியை பராமரித்தல், கை சுகாதாரம் போன்றவற்றை அனைத்து நபர்களும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.