வாட்ஸ்அப் டீலிங்., ரூ.100 கோடி மோசடி! டெல்லி போலீசில் வசமாக சிக்கிய சீனா நபர்!
வாட்ஸ்அப் மூலம் ரூ.100 கோடி வரையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த சீனாவை சேர்ந்த ஃபாங் செஞ்சின் என்பவரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது.
டெல்லி : ஆன்லைன் போலி பங்கு சந்தை மூலம் ரூ.100 கோடி வரையில் மோசடியில் ஈடுபட்டதாக சீனாவை சேர்ந்த ஃபாங் செஞ்சின் என்பவரை டெல்லி சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர் மீது ரூ.100 கோடி வரையில் மோசடி வழக்கு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுரேஷ் அச்சுதன் என்பவர் சைபர் கிரைம் போலீசாரில் அளித்த புகாரில், தன்னிடம் ஆன்லைன் வாயிலாக பங்கு சந்தை முதலீடு குறித்து பயிற்றுவிப்பதாக கூறி வாட்ஸ்அப் செயலி வழியாக தொடர்பு கொண்டு ரூ.43.5 லட்சம் வரையில் பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டார்கள் என புகார் அளித்து இருந்தார்.
அதன் பெயரில் விசாரணையை மேற்கொண்ட டெல்லி சைபர் கிரைம் போலீசார், மகாலட்சுமி டிரேடர்ஸ் எனும் வங்கி கணக்கு பெயரில் இந்த வங்கி பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக கண்டறிந்து டெல்லியில் தங்கி இருந்து ஆன்லைன் மோசடி வேளைகளில் ஈடுபட்டதாக சீனா குடியுரிமை கொண்ட ஃபாங் செஞ்சின் என்பவரை கைது செய்தனர்.
அந்த நபரை விசாரணை செய்ததில், செஞ்சின் பல்வேறு சைபர் குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு உட்பட 17 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சைபர் குற்றங்கள் மூலம் சுமார் ரூ.100 கோடி வரையில் மோசடி நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.