விலைபேசும் அபாயம்! காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்களை சண்டிகர் அழைத்து செல்ல திட்டம்!
பாஜக குதிரை பேரத்தை தடுக்க வெற்றி முகத்தில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை சண்டிகாருக்கு அழைத்து செல்ல கட்சி தலைமை திட்டம்.
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை விட காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இரு தேசிய கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றனர். இதனால் இமாச்சலில் மீண்டும் பாஜகத்தான் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது இமாச்சல பிரதேச தேர்தலில் மொத்தமுள்ள 68 இடங்களில், காங்கிரஸ் 39 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக குஜராத்தில் அமோக முன்னிலை பெற்றாலும் இங்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது, 26 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இமாச்சலில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதால் சிம்லாவில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மறுபக்கம், இமாச்சல் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்களை சண்டிகர் அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விலைபேசும் அபாயம் இருப்பதால், காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்களை பாதுகாக்க அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்க தங்களது வேட்பாளர்களை சண்டிகர் அழைத்து செல்கிறது காங்கிரஸ் தலைமை. கோவா, மத்திய பிரதேசத்தில் செய்தது போல காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, இமாச்சலில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெறும் வேட்பாளர்களை சண்டிகர் அழைத்து செல்ல கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.