ஆர்.ஜி கர் மருத்துவமனை வழக்கு : சந்தீப் கோஷ் அதிரடி கைது.! பின்னணி என்ன.?
ஆர்.ஜி கர் மருத்துவமனை கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை மற்றொரு வழக்கில் நேற்று சிபிஐ விசாரணை குழுவினர் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தா : கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆர்.ஜி கர் மருத்துவமனை வளாகத்தில் 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பகட்டத்தில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சஞ்சய் ராய் எனும் தன்னார்வலர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, ஆர்.ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ விசாரணை குழுவினர் கடந்த 15 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் விசாரணையில் உள்ள சந்தீப் கோஷின் மீது ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு அதனை மாநில சிறப்புப் புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆர்.ஜி கர் மருத்துவமனையில் உரிமைக் கோரப்படாத உடல்கள், மருத்துவ கழிவுகளை சட்டவிரோதமாக கடத்தியதாக அவர் மீது புகார் பதியப்பட்டு இருந்தது. அதன் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடர்ந்து வருகிறது.
இந்த குற்ற வழக்கையும் சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, சிபிஐ மற்றொரு பிரிவினர் இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் முக்கிய நபராக ஆர்.ஜி கர் மருத்துவமனை முன்னாள் நிர்வாகி அக்தர் அலி , சந்தீப் கோஷிற்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகளை நீதிமன்றத்தில் கூறியள்ளார்.
அதனடிப்படையில், விசாரணை வளையத்தில் இருந்த சந்தீப் கோஷ் மற்றும் அவரது பாதுகாவலர் அஃப்சர் அலி கான், ஆர்.ஜி கர் மருத்துவமனையில் மருந்து சப்ளை செய்யும் பிப்லாவ் சின்கா, சுமன் ஹோஸ்ரா ஆகியோரை நேற்று சிபிஐ விசாரணை குழுவினர் கைது செய்துள்ளனர்.