மசூதியில் சுட்டுக்கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி..!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் இன்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்த ஓய்வுபெற்ற மூத்த காவல் கண்காணிப்பாளர் அதிகாரி அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் போலீஸார் கூற்றுப்படி, பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர் முகமது ஷாபி மிர் (72) , இவர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் முன்னாள் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர். அவர் கண்ட்முல்லா கிராமத்தில் மசூதி ஒன்றில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்யப்பட்டதாக போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முகமது ஷாபி மிரின் வீடு மற்றும் மசூதி வளாகத்தில் ஏராளமானோர் திரண்டனர்.
இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த கொலைக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, முகமது ஷாபி மிர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தன. கடந்த மாதம், ஸ்ரீநகரின் ஈத்கா மசூதி அருகே காவல் ஆய்வாளர் ஒருவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்ரீநகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் காவல் ஆய்வாளர் மஸ்ரூர் அகமது வானி அங்குள்ள சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.