பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்.! கேரளா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்.!
இந்துக்கள், கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என அனைவருக்கும் அவர்தம் மதவழக்கத்தின் படி உள்ள வழிமுறைகளை பின்பற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உரிமை உண்டு. அதனை கலைத்து ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வரமத்திய அரசு முயன்று வருகிறது.
இந்த பொதுசிவில் சட்டம் குறித்து மக்களின் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. இந்த பொது சிவில் சட்டமானது, சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என கடுமையான எதிர்ப்புகளை பல்வேறு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் இன்று கேரள சட்டமன்றத்தில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை விதி எண் 118இன் கீழ் தாக்கல் செய்தார். பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த கூடாது என இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்றது
கேரளா மாநில ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் பொது சிவில் சட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்த தீர்மானமானது கேரள சட்டமன்றத்தில் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.