பதவி விலகிய உத்தவ் தாக்கரே – அடுத்த முதல்வர் இவரா?..!..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர்.
இதனால்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.இதனைத்தொடர்ந்து,மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிர்த்து சிவசேனா தலைமைக் கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில்,அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.கே.கவுல் ஆஜராகி வாதாடினார்.
அப்போது,நம்பிக்கை வாக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டால் அது ஜனநாயக அரசியலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்றும்,தகுதிநீக்க நடைமுறையானது சபாநாயகர் முன் நிலுவையில் இருப்பதை வைத்து,நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் ஷிண்டேவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனால்,மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் எனவும்,ஆளுநரின் உத்தரவுப்படி மராட்டிய பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு வழக்கின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,சிவசேனா கொறடா சுனில் பிரபுவின் வழக்கை வரும் 11-ம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதனிடையே,மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர்,சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியையும் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துள்ளார்.மேலும்,எதிர்பாராத விதத்தில் பதவிக்கு வந்தேன்.அதே பாணியில் வெளியே செல்கிறேன்.நான் நிரந்தரமாக போகப்போவதில்லை.இங்கேயே இருப்பேன்.மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் மகாராஷ்டிரா மாநிலசட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது.இதனால்,பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்,அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,ஆளுநரை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனவும்,தமக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.ஆளுநர் அழைப்பு விடுக்கும் நிலையில் நாளை தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.