அரசு வேலைகளில் 3-ஆம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு தேவை- முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மோண்டல்
அரசு வேலைகளில் 3-ஆம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு தேவை என்று இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மொண்டல் கூறியுள்ளார்.
இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மொண்டல் , தனது சமூக உறுப்பினர்களுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு தேவை என்று கூறியிருக்கிறார். மொண்டல் தனது சமூகத்திற்கும் நாட்டில் போதுமான எண்ணிக்கையில் தங்குமிடங்கள் தேவை என்றும், இது தொடர்பாக அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவது மிகவும் முக்கியம். எனக்கு வேலை இல்லை என்றால், எனக்கு யார் உணவளிப்பார்கள். அவர்கள் காவல்துறை மற்றும் ரயில்வே போன்ற பிரிவுகளில் நுழைவது, 3-ஆம் பாலினத்தவர் மீதான சமூகத்தின் பார்வையை மாற்றும் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உதவும் என்று கூறினார்.
மொண்டல், 2017 இல் மேற்கு வங்காளத்தில் உள்ள இஸ்லாம்பூரின் லோக் அதாலத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார், இந்தியாவில் அத்தகைய பதவியை வகித்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். 2018 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெற்ற லோக் அதாலத்தில் திருநங்கை ஆர்வலர் வித்யா காம்ப்ளே, உறுப்பினர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
மூன்றாவதாக கவுகாத்தியைச்சேர்ந்த ஸ்வாதி பிதான் பருவா என்ற திருநங்கை நீதிபதியாகப் பதவியேற்றார். கடந்த வாரம், ஒரு முக்கிய முடிவில், மகாராஷ்டிரா அரசு பம்பாய் உயர் நீதிமன்றத்தில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் போலீஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.