பொதுமுடக்கத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை.!
ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று அசாம் மாநிலம் அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவி நாடு முழுவதும் வைரஸின் தீவிரம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் 3 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் திதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும் போது நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், பிரதமர் மோடி கொரோனா குறித்தும், ஊரடங்கு நீடிப்பதா, தளர்வு செய்யப்படுவதா என்பதை பற்றியும் அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் சில மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று அசாம் மாநிலம் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அதில், பொதுமுடக்கத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க கோரி மத்திய அரசுக்கு அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.