மத மாற்றத்திற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது- உச்சநீதிமன்றம்
மத மாற்றத்திற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மோசடியான மத மாற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மத மாற்றம் என்பது அரசியல் சாயம் பூசப்படக் கூடாது, இது ஒரு தீவிரமான பிரச்சினை என்பதால், இதற்கு அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியின் உதவியைக் கேட்டுள்ளது.
நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மிரட்டல், ஏமாற்றுதல், பரிசுகள் மற்றும் பணம் மூலம் ஏமாற்றி நடைபெறும் மத மாற்றங்களைச் சரிபார்க்க, வெங்கடரமணியின் உதவியை கேட்டுக் கொண்டது. தொடக்கத்தில், தமிழ்நாடு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி வில்சன், இந்த மனுவை அரசியல் உள்நோக்கம் கொண்ட பொதுநல வழக்கு என்று அழைத்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள் குழு, இது நாடு தழுவிய பிரச்சனை இதனை அரசியல் ஆக்காதீர்கள் என்று கூறினர். அஷ்வினி குமார் தாக்கல் செய்த மனுவில், கட்டாய மத மாற்றம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும், உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி கூறியிருந்தது.
ஏமாற்றுதல், கவர்ச்சி மற்றும் மிரட்டல் மூலம் நடைபெறும், மதமாற்றம் நிறுத்தப்படாவிட்டால், மிகவும் கடினமான சூழ்நிலை உருவாகும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த வழக்கு பிப்ரவரி 7ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.