உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 5 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்!
ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 5 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்த பாடில்லை. தினமும் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். குறைந்தது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையில் படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை என மக்கள் மருத்துவ சிகிச்சையும் பெற முடியாமல் பல இடங்களில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய மாநில அரசுகள் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா முதல் அலையின் போதே இந்தியாவிற்கு அதிகம் உதவி செய்த ரிலையன்ஸ் நிறுவனம், தற்போதும் இந்தியாவிற்கு கொரோனா இரண்டாம் அலை நேரத்திலும் பல உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி அவர்கள் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனாவுக்கு எதிராக வாரம் முழுவதும் 24 மணி நேரமும் நடைபெறக்கூடிய போரில் ரிலையன்ஸ் நிறுவனமும் பங்கேற்க வேண்டுமென பொறுப்புள்ள ஒரு அக்கறையுள்ள குடிமகனாக தான் கருதுவதாக கூறியுள்ளார்.
மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடமை என்பது விரிவான மற்றும் நிலையானது என்பதை இந்தக் கொரோனா தொற்றின் மூலமாக தங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும், நாட்டுக்கு தேவைப்படும் பல்வேறு வகை உதவிகளை செய்ய வேண்டும் என தாங்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்திலும் மக்களுக்காக ஓய்வில்லாமல் அம்மாநில அரசு உழைப்பதை நாங்கள் பாராட்டுகிறோம். எனவே கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 5 கோடி ரூபாயை வழங்குவதில் ரிலையன்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.