தேசிய உயர் கல்வித் தகுதிக்கான வரைவு அறிக்கை வெளியீடு- பல்கலைக்கழக மானியக் குழு!
புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் தேசிய கல்வி தகுதிக்கான புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு.
தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் உயர் கல்வியுடன் தொழிற்கல்வியை இணைத்து, மாணவர்கள் பயில்வதற்கான வழிமுறையுடன் புதிய வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை கல்வியாளா்கள், பேராசிரியா்கள் பிப்ரவரி 13-ஆம் தேதிக்குள் idpnep2020@gmail-க்கு அனுப்ப வேண்டும் என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்த சுற்றறிக்கையில், ஒவ்வொரு உயா்கல்வி நிறுவனமும் தங்களின் வளா்ச்சி மற்றும் இலக்கை அடைவதற்காக தனி திட்டங்களைத் தயாரித்து அவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஏதுவாக உயா்கல்வி நிறுவனங்களுக்கான மேம்பாட்டு திட்டத்தின் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்களை யுஜிசி இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, தேசிய கல்விக் கொள்கையை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்தது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக இணையவழி கருத்தரங்கை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்த நிலையில், தேசிய கல்வி தகுதிக்கான புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு.