கொரோனா பீதியில் உதவ முன்வராத உறவினர்கள்.! கொட்டும் மழையில் தந்தையின் உடலை சைக்கிளில் தள்ளி சென்று அடக்கம் செய்த அவல சம்பவம்.!
கொரோனா பரவும் என்ற அச்சத்தில் இறந்த முதியவரின் இறுதி சடங்கிற்கு உறவினர்கள் உதவவில்லை என்பதால் கொட்டும் மழையில் தந்தையின் உடலை சைக்கிளில் வைத்து தள்ளி கொண்டு சென்று மயானத்தில் அடக்கம் செய்த அவல சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகாவில் உள்ள பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த 71 வயதான முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யவில்லையாம்.
மேலும், அந்த முதியவர் உடல்நிலை சரியில்லாமலும் இருக்க, நேற்றைய முன்தினம் அவரது வீட்டில் வைத்து மரணமடைந்தார். உடனடியாக இறந்தவரின் உடலை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸிற்கு அழைத்த போது, ஆம்புலன்ஸ் வரவில்லையாம் . மேலும் சுகாதாரத் துறை ஊழியர்களும் அடக்கம் செய்ய முன்வரவில்லையாம்.
ஏனெனில் இறந்தவர் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படாத காரணத்தால் அவர்கள் வரவில்லையாம். மேலும் குடும்பத்தில் உறவினர்கள் யாரும் கொரோனா அச்சத்தால் இறுதி சடங்கிற்கு உதவ முன்வரவில்லையாம்.
அதனையடுத்து இறந்த முதியவரின் மகன் மற்றும் மருமகன் இருவரும் இணைந்து கிராம பஞ்சாயத்து வழங்கிய பிபிஇ கிட்களை அணிந்து கொண்டு இறந்தவரின் உடலை பிளாஸ்டிக் கவரால் மூடி கொண்டு கனமழையில் சடலத்தை சைக்கிளில் வைத்து தள்ளி கொண்டே மயானத்தில் கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர்.
இந்த அவல சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத் தளங்களில் மிகவும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.