கொரோனா நோயாளி உயிரிழந்ததால் மருத்துவரை தாக்கிய உறவினர்கள் – 24 பேர் கைது!
அசாமில் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை தாக்கிய காட்சி வெளியாகி உள்ள நிலையில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் பல இடங்களில் அவமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அசாமில் உள்ள ஹோஜோய் மாவட்டத்தில் உள்ள உதலி நகரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி அனுமதிக்கப்பட்ட 3 மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் 20 பேர் மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர் சியூச் குமார் என்பவரை சரமாரியாக அடித்துள்ளனர். அவர்களை தடுக்க சென்ற மருத்துவமனை ஊழியர்களையும் அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு இந்திய மருத்துவக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளது. இதனை அடுத்து மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்ய போலீசாருக்கு அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.