டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு!
டெல்லி மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை மாலை டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.

டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி 27 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதியே ரிசல்ட் வெளியாகி இருந்தாலும், இன்று வரை அம்மாநில முதலமைச்சர் யார் என்பது தெரியாமல் இருந்தது.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் முடிந்த பிறகு இதற்கான ஆலோசனை இருக்கும் என கூறப்பட்டிருந்தது. அதேபோல, இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று காலை முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர்களான ரவி சங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரை டெல்லி பாஜக எம்எல் ஏக்களை ஒருங்கிணைக்கும் பணியில் பாஜக தலைமை அமர்த்தியது. அவர்கள் தலைமையில் தற்போது டெல்லி பாஜக எம்எல்ஏக்கள், ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கட்சி தலைமை தேர்வு செய்திருந்த நபர்களில் ஒருவரை முதலமைச்சராக தேர்வு செய்யும் பணி மேற்கண்ட இருவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது.
பர்வேஷ் வர்மா, விஜேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யாய் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்ததாக தனியார் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. ஆனால் இவர்களையெல்லாம் தவிர்த்து 2007 மற்றும் 2012இல் டெல்லியில் கவுன்சிலர் பதவி, முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் அதிலும் வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வான ரேகா குப்தாவை டெல்லியின் புதிய முதலமைச்சராக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியின் 9வது முதலமைச்சராக ரேகா குப்தா நாளை பதவி ஏற்க உள்ளார். சுஷ்மா சுவராஜ் (பாஜக), ஷீலா தீக்ஷித் (காங்கிரஸ்), அதிஷி (ஆம் ஆத்மி)-ஐ அடுத்து டெல்லியின் 4வது பெண் முதலமைச்சர் ரேகா குப்தா ஆவார்.
இதனை தொடர்ந்து டெல்லி பாஜக எம்எல்ஏக்கள், ரேகா குப்தா தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவை சந்திக்க உள்ளனர். புதிய முதலமைச்சருக்கான பதவி ஏற்பு விழாவானது நாளை மாலை 4.30 மணியளவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.