குண்டுவெடிப்புக்கு முன் சிம்மோகாவில் ஒத்திகை.? என்ஐஏ விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!
கர்நாடகாவின் மங்களூருவில் ஆட்டோ குண்டுவெடிப்புக்கு முன் முகமது ஷரீக், சிம்மோகாவில் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது என்ஐஏ விசாரணையில் வெளிவந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த பயணி ஒருவர் என இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன் பின்னர், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை போலீசார் வெளியிட்டனர்.
அதில், ஆட்டோ ஓட்டிவந்த முகமது ஷாரிக், கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி பகுதியை சேர்ந்தவர். இவர் கோவை, சிங்காநல்லூர் பகுதியில் சில மாதங்கள் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளார். அப்போது தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரன் உடன் நட்பாகி, அவரது பெயரிலேயே சிம் கார்டு வாங்கியுள்ளார், இதனால் சுரேந்திரனை ரகசிய இடத்தில் வைத்து தமிழக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுவரை கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 சிம் கார்டுகளை ஷாரிக் மாற்றியுள்ளார். இந்த குக்கர் குண்டு ஆனது, மைசூரில் தயாரிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒன்றரை மாதங்கள் தங்கி இருந்து குக்கர் குண்டை தயாரித்துள்ளார் ஷாரிக்.
மைசூரில் நடத்திய சோதனையில் வெடிகுண்டு தயாரிக்க உபயோகப்படுத்திய பொருட்கள், சிம் கார்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மைசூரில் இருந்து அரசு பேருந்து மூலம் குக்கர் குண்டு கொண்டுவரப்பட்டு, பின்னர் ஆட்டோ மூலம் மங்களூரு வரும்போது இந்த வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது.
ஷாரிக் மீது வெடிபொருள் தடுப்பு சட்டம் மற்றும் கூட்டு சதி போன்ற வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது என்ஐஏ விசாரணையில் அவர்கள் கூறியதாவது, நாங்கள் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக்கிடம் விசாரணை தொடங்கியுள்ளோம்.
வெடிகுண்டு தயாரிப்பது குறித்து இணையத்தில் தகவல்கள் தேடியுள்ளார், மேலும் டெலிகிராம் இணையதளத்தில் பிடிஎஃப் கோப்பு மூலம் குக்கர் குண்டு தயாரித்து வெடிக்கவைத்துள்ளார். இவர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன் சொந்த ஊரான சிம்மோகாவில், நண்பர்கள் யாசின், மாஸ் ஆகியோருடன் இணைந்து குண்டு வெடிப்பு ஒத்திகை பார்த்துள்ளார்.
மேலும், அவர் கோவையில் இருந்து மதுரைக்கும் சென்றுள்ளதால் கோவையில் ஷரீக் யாரையாவது சந்தித்தாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.