சிகப்பு டைரி சர்ச்சை..! அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜேந்திர குத்தா பரபரப்பு குற்றச்சாட்டு.!
தன்னிடம் முதல்வர் குறித்த ரகசிய தகவல்கள் கொண்ட சிகப்பு டைரி உள்ளதாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேந்திர குத்தா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக அமைச்சர் பதவியிலிருந்த போது ராஜேந்திர குத்தா சட்டசபையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், தன்னை சட்டசபைக்குள் விடாமல், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தன்னை தடுத்து அடித்து, தாக்கியதாக கூறி அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் குறித்த முக்கிய விவரங்கள் அடங்கிய சிவப்பு டைரி ஒன்று தன்னிடம் இருப்பதாக பரபரப்பு குற்றச்சாற்று ஒன்றை குத்தா முன் வைத்துள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றபோது, மணிப்பூரில் நடந்த கலவரத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது, மாநில ஊர்க்காவல்படை மற்றும் குடிமைப்பாதுகாப்பு, பஞ்சாயத்துராஜ் அமைச்சராக இருந்த ராஜேந்திர சிங் குத்தா, ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது, மணிப்பூர் விவகாரத்தை விவாதிப்பதை விட நமது மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து எண்ணி பார்க்க வேண்டும் என்றார். மாநில அமைச்சர் பொறுப்பில் இருந்து கொன்டு ஆளும் மாநில அரசையே விமர்சித்த ராஜேந்திர சிங் குத்தா பேச்சு சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, சில மணி நேரங்களிலேயே எம்.எல்.ஏ ராஜேந்திர குத்தாவை முதல்வர் கெலாட் அரசு அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்தது. அசோக் கெலாட் அமைச்சரவையில் இருந்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நீக்கப்பட்ட எம்எல்ஏ ராஜேந்திர சிங் குதா, நேற்று சட்டசபைக்குள் வர முயன்றபோது காங்கிரஸ் தலைவர்களால் தாக்கப்பட்டதாக அவரே செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்துள்ளார்.
நேற்று ராஜஸ்தான் சட்டசபைக்குள் செல்ல முயன்ற ராஜேந்திர குத்தாவை அவைக் காவலர்கள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர குத்தா, நான் செய்த தவறு என்ன என்று கேட்டதுடன், பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை செய்தியாளர்கள் முன் வைத்தார். இது குறித்து அவர் பேசுகையில், “சட்டசபைக்குள் தன்னை நுழைய விடாமல், 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும், காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் என்னை தாக்கினர்.” என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ‘ நான் பா.ஜ.க-வில் இருப்பதாக கூறுகின்றனர், இதில் என்னுடைய தவறு என்ன என்பது தெரியவில்லை. மேலும், நான் வைத்திருந்த சிவப்பு டைரியை சபாநாயகரிடம் வழங்க முயன்றபோது, இவ்வாறு செய்தனர். அந்த டைரியில் அசோக் கெலாட் மற்றும் அவரது மகன் பெயர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட பணம் உள்ளிட்ட நிதி பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்கள் இருப்பதாகவும்’ கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ராஜஸ்தானில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கு முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அமைச்சரவையில் ஏற்பட்ட இந்த சலசலப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள குழப்பம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.