பட்டபடிப்புக்கான அங்கீகாரம்.. அக்னி வீரர்களுக்கு மத்திய அரசு அதிரடி சலுகை!
சேவையிலுள்ள அக்னி வீரர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, அக்னபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ள நிலையில், இதற்கு வயது வரம்பு 17.5 – 21 வயது வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு துணை ராணுவப் படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அக்னிபத் என்ற திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள் 4 ஆண்டு பணிக்கு பின் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் சேர்க்கப்படுவர் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அக்னி வீரர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. அதில், சேவையின்போது அக்னி வீரர்கள் பெறும் பயிற்சியை பட்டபடிப்புக்கான மதிப்பீடாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.
மேலும், அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் சேவைக்கு பின் பிற துறைகளில் வேலைபெற ஏற்பாடு செய்யப்படும். அக்னி வீரர்களுக்கான கல்வித் திட்டத்தை இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. அக்னி வீரர் பெறும் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் சாராத 50% திறன் பயிற்சி இளநிலை பட்டபடிப்புக்கான மதிப்பீடாக கருதப்படும். எஞ்சிய 50% மொழி, பொதுநிர்வாகம், வணிகவியல் போன்ற படங்களில் பெறும் பயிற்சியிலிருந்து மதிப்பீடு செய்யப்படும் என சேவையிலுள்ள அக்னி வீரர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.