நிதி நெருக்கடியில் சிக்கிய லஷ்மி விலாஸ் வங்கி ! டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க முடிவு
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லஷ்மி விலாஸ் வங்கியினை (எல்விபி) ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் , சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி 90 வருடங்களுக்கு மேல் பாரம்பரியம் கொண்டது.ஆனால் இந்த வங்கி கடந்த 3 ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி இணைப்பதற்கான ஒரு பகுதியாக, லட்சுமி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.இதன்படி 17.11.2020 முதல் 16.12.2020 வரை அதன் வாடிக்கையாளர்கள் ரூ.25,000 மேல் பணம் எடுக்கவோ, பரிமாற்றம் மேற்கொள்ளவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த வங்கியினை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைவதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி குறைத்த பின்னர் லட்சுமி விலாஸ் வங்கியின் பிரச்சினை தீவிரமடைந்தது. அதன்பிறகு, கிளிக்ஸ் கேபிடல் லிமிடெட் ( Clix Capital Ltd) உடன் இணைக்க செய்த முயற்சியும் தோல்வி அடைந்தது.
இருப்பினும், லஷ்மி விலாஸ் வங்கியின் இணைப்பு அதன் பங்குதாரர்களுக்கு ஒரு மோசமான செய்தி ஆகும். ஆனால் லஷ்மி விலாஸ் வங்கியின் முழு மூலதனமும் டிபிஎஸ் வங்கி (DBS Bank India) உடன் இணைக்கப்பட்ட பின் எழுதப்படும்.
“ஒருங்கிணைப்பதற்கான வரைவு திட்டத்தின் படி, நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து, எல்விபியின் பங்கு / பத்திர பிரீமியம் கணக்கில் நிலுவைகள் உட்பட, பணம் செலுத்திய பங்கு மூலதனம் மற்றும் இருப்புக்கள் மற்றும் உபரி ஆகியவற்றின் முழுத் தொகையும் எழுதப்படாது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எந்தவொரு பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ள அதன் பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் பட்டியலிடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.