ஒரு சகாப்தத்தின் இறுதி நிமிடங்கள்.., ரத்தன் டாடாவின் தோற்றமும்., மறைவும்.,

இந்தியவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று இரவு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது பிறப்பு குறித்தும், வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் குறித்தும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Ratan Tata

மும்பை : டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா நேற்று இரவு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்தியாவில் பிரபல தொழிலதிபராகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் நல்ல மனிதராகவும் அறியப்படும் ரத்தன் டாடாவின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது இறுதி ஊர்வலம் இன்று மும்பையில் நடைபெற உள்ளது. அரசு முறை இறுதி சடங்கிற்கு முன்னதாக பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மும்பை NCPA மைதானத்தில் ரத்தன் டாடா உடல் வைக்கப்பட உள்ளது. இவரது இறுதி அஞ்சலி அரசு முறைப்படி நடைபெறும் என மகாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள் கிழமை அன்றே, ரத்தன் டாடா உடல்நிலை மோசமாக இருந்தது எனக் கூறி, அவர் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தகவல்கள் வெளியாகியது. ஆனால்,  இந்தச் செய்தியை ரத்தன் டாடா அப்போது மறுப்பு தெரிவித்து, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தான் நலமுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ரத்தன் டாடா இளமை காலம் :

மும்பையில் பார்சி ஜோராஸ்ட்ரியன் குடும்பத்தில் 28 டிசம்பர் 1937-இல் பிறந்த ரத்தன் டாடாவுக்கு 10 வயது இருக்கும்போதே அவரது தாய் தந்தை இருவரும் உயிரிழந்துவிட்டனர். அதன்பிறகு, ஜேஎன் பெட்டிட் பார்சி குழந்தைகள் இல்லம் மூலம் வளர ஆரம்பித்தார். பின்னர் தான்,  அவரது பாட்டி நவாஜ்பாய் டாடா , ரத்தன் டாடாவை தத்தெடுத்தார்.  ரத்தன் டாடா தனது ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடாவுடன் ஒன்றாக வளர ஆரம்பித்தார்.

மும்பையில் பள்ளிப்படிப்பை முடித்த ரத்தன் டாடா, கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பிசினஸ் கல்லூரியிலும் தனது மேற்படிப்பை மேற்கொண்டார். அதன் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ் என பல்வேறு இடங்களில் பணியாற்றிய பிறகே டாடா குழுமத்தில் தன்னை இணைத்து கொண்டார்.

தலைமை பொறுப்பு :

1991ஆம் ஆண்டு, ஜே.ஆர்.டி.டாடா டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின், ​ரத்தன் டாடா தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு திறம்பட கையாண்டார்.  பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கி டாடா குழுமத்தை நகர்த்தினார். இவர் தலைமைக்கு பின்னர் டாடாவின் வருமானம் 50 மடங்காக உயர்ந்தது.

சேவைகள் :

தொழில்முறையில் எவ்வளவு லாபம் ஈ ட்டினாலும், தற்போதும் ரத்தன் டாடாவை பலரும் போற்றுவதற்கு காரணம், அவர் செய்த தொண்டுகள். குறிப்பாக கல்வி மருத்துவம், கிராமப்புற மேம்பாட்டு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என பல்வேறு வகைகளில் சமூக நல தொண்டாற்றியுள்ளார்.  டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையானது இதுவரை 28 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு டாடா ஸ்காலர்ஷிப் நிதியை வழங்கியுள்ளது குறிப்பிட தக்கது. இதுபோக ஏராளமான நன்கொடைகளை அவர் வழங்கியுள்ளார்.

மத்திய அரசு விருதுகள் :

இவரது பணிகளை போற்றும் விதமாக, மத்திய அரசு 2000ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும், 2008இல் பத்ம விபூஷன் விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்