Live Update : ரத்தன் டாடா மறைவு ! மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்.,
ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மும்பையில் உள்ள என்.சி.பி.ஏ அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
மும்பை : வயது முதிர்வு காரணமாக பல்வேறு உடல் கோளாறு காரணமாக கடந்த திங்கள்கிழமை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது உடல் நிலை சரியாக இல்லை என தொடர்ந்து செய்திகள் வந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) இரவு அவர் உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, அவரது உடலை கொலாபாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பிறகு மும்பையில் உள்ள என்.சி.பி.ஏ அரங்குக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக ரத்தன் டாடா உடல் வைக்கப்படுகிறது. மேலும், சமூக அர்ப்பணிப்புக்காக அவரின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என மகாராஷ்டிரா முதல்வரான ஏக்நாத் ஷிண்டே முன்னதாக அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இன்று ஒருநாள் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.
- மும்பையில் உள்ள NCPA புல்வெளியில் ரத்தன் டாடாவின் உடல் வைக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது இறுதி ஊர்வலம் தொடங்கி இருக்கிறது.
- தொழிலதிபராக டாட்டாவுக்கு ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வை அவரிடம் இருந்தது. ஒரு சிறந்த தொழிலதிபரை இழந்துவிட்டோம். ஆனால் அவரது எண்ணங்கள், சித்தாந்தம் என்றென்றும் நம்முடன் நிலைத்திருக்கும்”, என ரத்தன் டாடாவின் மறைவு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியிருக்கிறார்.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மும்பையில் உள்ள NCPA புல்வெளியில் புகழ்பெற்ற தொழிலதிபர் மறைந்த ரத்தன் டாடாவுக்கு நேரில் சென்று அஞ்சலியை செலுத்தினார்.
- மறைந்த தொழிலதிபரான ரத்தன் டாடாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
- “அதிகாரத்தில் இருப்பவர்களிடம் உண்மையைப் பேசும் தைரியம் ரத்தன் டாடாவிற்கு இருந்தது” என தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவும் உலகமும் மாபெரும் இதயம் கொண்ட ஒரு மாபெரும் மனிதனை இழந்துவிட்டது என ரத்தன் டாடாவின் மறைவுக்கு அமெரிக்க தூதர் கார்செட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
- ‘இந்தியாவின் தொழில் வளர்ச்சியின் மகத்தான முன்னோடி ரத்தன் டாடா. நாட்டிற்கு பெரும் சொத்தாக இருந்தவர். அவரது மறைவு இந்திய துணைக்கண்டத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்’ , என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
- மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் NCP தலைவர் பிரபுல் படேல் ஆகியோர் ரத்தன் டாடாவு உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
- நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி , “தொழில்துறையின் உண்மையான தலைவரான ரத்தன் டாடாவின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம். அவரது தொலைநோக்கு தலைமை இந்தியாவைத் தாண்டி பல உயிர்களைத் தொட்டது. அவரது மறைவு எங்களுக்கு துக்கத்தை வரவைத்துள்ளது. அவரது புகழை சமூகம் போற்றட்டும்.” என டிவீட் செய்துள்ளார்.