வெடிக்கும் உன்னாவ் விவகாரம் ! பாதிக்கப்பட்ட பெண் அனுப்பிய கடிதம் தொடர்பாக பதிவாளர் அறிக்கை அளிக்க தலைமை நீதிபதி உத்தரவு
உன்னாவ் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளர் அறிக்கை அளிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் குற்றம்சாட்டிவந்தார்.
இது தொடர்பாக புகார் அளிக்க சென்ற அந்த பெண்ணின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்த போது உயிரிழந்தார்.ஏற்கனவே அந்த பெண்ணின் பாலியல் புகார் பெரும் சர்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை இறந்தது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.நாடு முழுவதும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது.
கடந்த 12 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் தனது உயிருக்கும் தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாக தெரிவித்தார்.
இதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண் ரேபரேலி பகுதியில் அவருடயை அம்மா, அவருடைய வழக்கறிஞர், பெண்ணின் உறவினப் பெண்கள் ஆகியோர் காரில் சென்றனர்.
அப்போது அவர்கள் சென்ற கார் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் கடுமையாக காயமடைந்தனர்.எதிர்பாராத விதமாக இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மா மற்றும் உறவினப் பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணும் வழக்கறிஞரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள்.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தது.நடந்த விபத்திற்கு பாஜகதான் காரணம் என்று குற்றம்சாட்டியது.
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குடும்பத்தார் எழுதிய கடிதத்தை தாமதமாக வழங்கியது ஏன்? என்று ஒருவாரத்திற்குள் பதிலளிக்க உச்சநீதிமன்ற பதிவாளருக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.