முன்னாள் தலைமை நீதிபதி இன்று காலை 11 மணிக்கு மக்களை உறுப்பினராக பதவியேற்கிறார்… பதவியேற்க தடை விதிக்க கோரியும் மனு…
இந்தியாவில் குடியரசு தலைவருக்கு அடுத்த அதிகாரமிக்க பதவி என்றால் அது இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஆகும். இதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த பதவியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை, தற்போது நியமன பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனையடுத்து, மாநிலங்களவையில் இன்று காலை 11 மணிக்கு முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவியேற்க உள்ளார்.இதனிடையே, மாநிலங்களவை நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகாய் பதவியேற்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுத்தாக்கலை சமூக செயற்பாட்டாளர் மது பூர்ணிமா கிஷோர் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், லோக்பால், யுபிஎஸ்சி, சிஏஜி உள்ளிட்ட அமைப்புகளில் ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு பதவிகள் வழங்குவது, நீதித்துறை சுதந்திரத்தை பாதிக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற பதவிகளில் ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமனம் செய்ய உரிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.