11 நாள் பூஜையை துவங்கிய பிரதமர் மோடி.! ஆடியோ மூலம் வெளியிட்ட முக்கிய செய்தி..!
உத்திர பிரதேசம் அயோத்தில் புதிதாக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு வரும் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா (Pran Pratistha) நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்பு ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி , மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், இன்று முதல் சிறப்பு பூஜையை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி உள்ளார். ராமர் கோயில் விழாவில் கலந்து கொள்வது எனது அதிர்ஷ்டம், அதற்காக இன்று முதல் பூஜையை தொடங்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் சங்கராச்சாரியர்கள் பங்கேற்க மாட்டார்கள்!
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், அயோத்தியில் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டைக்கு (கும்பாபிஷேக விழா) இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த புனிதமான நிகழ்வை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. பிரான் பிரதிஷ்டையின் போது இந்தியாவின் அனைத்து குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த கடவுள் என்னை படைத்துள்ளார். இதை மனதில் வைத்து, இன்று முதல் 11 நாள் சிறப்பு சிறப்பு பூஜைகளை தொடங்குகிறேன் ”என்று பிரதமர் பதிவிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து ஒரு சிறப்பு வீடியோ வடிவில் ஒரு ஆடியோ செய்தியையும் பிரதமர் வெளியிட்டுள்ளார். அதில், இந்து மத சாஸ்திரங்களின்படி, ஒரு தெய்வத்தின் சிலையின் பிரான் பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) ஒரு விரிவான செயல்முறை. இதற்காக, பிரான் பிரதிஷ்டைக்கு பல நாட்களுக்கு முன்பே பின்பற்றப்பட வேண்டிய விரிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. பிரான் பிரதிஷ்டை தினத்தன்றும் அதற்கு முன்பிருந்தும் அனைத்து விதிகளையும் பரிகாரங்களையும் இன்றிலிருந்து வேதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ள அதே கண்டிப்புடன் பின்பற்றுவேன் என அதில் கூறியுள்ளார்.