திட்டமிட்டபடி நாளை டெல்லியை நோக்கி பேரணி – விவசாயிகள்
விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் கடந்த 13ம் தேதி டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியை நோக்கி பேரணி தொடங்கினர். இதனால் டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை விதிக்கப்பட்டது.
விவசாயிகள் பேரணியை டெல்லிக்குள் நுழையவிடாமல் தீவிர தடுப்புகள் அமைக்கப்பட்டு, கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல் விவசாயிகள் டெல்லி – ஹரியானா எல்லை பகுதியான ஷம்பு என்ற பகுதியில் குவிந்து தொடர்ந்து முன்னேறினர். இதன் காரணமாக டெல்லி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.
இதனிடையே, மத்திய அரசுடன் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டனர். இந்த சூழலில், மத்திய அரசுடன், விவசாய சங்கங்கள் நேற்று 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை முன்னெடுப்போம் என விவசாயிகள் கூறியதாக தகவல் வெளியானது.
இன்று ஜம்மு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி..!
இந்த நிலையில், 4வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி டெல்லியை நோக்கி நாளை பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளன. மத்திய அரசு அளித்த பரிந்துரை குறித்து விவாதிக்க இரு நாட்கள் போராட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நாளை போராட்டம் நடைபெறும் என்றுள்ளனர்.
பருப்பு, சோளம், பருத்தி பயிர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என மத்திய அரசு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்க மறுத்த விவசாயிகள் திட்டமிட்டபடி நாளை டெல்லிக்குள் நுழைய உள்ளதாக தெரிவித்தனர். விவசாய சங்க நிர்வாகி சர்வான் சிங் கூறியதாவது, நாங்கள் டெல்லிக்குள் நுழைய கூடாது என மத்திய அரசு நினைக்கிறது.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாவிடில் எங்களை போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். போராட்டத்தின்போது எங்கள் மீது ரப்பர் குண்டுகள் வீசப்பட்டன. அரசு எங்களின் கோரிக்கையை ஏற்காததால் இனி என்ன நடந்தாலும் அதற்கு அரசே பொறுப்பு என திட்டவட்டமாக கூறியுள்ளார்.