#RajyaSabhaElectionResults:மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெற்றி!
தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது.இதில் 41 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில்,நாடு முழுவதும் உள்ள நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 16 எம்பி இடங்களுக்கு நேற்று (ஜூன் 10-ஆம் தேதி) மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,உடனே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.
கர்நாடகா:
இந்நிலையில்,கர்நாடகாவில் நான்கு இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில்,மாநிலங்களவை எம்பி பதவிக்கு கர்நாடகாவில் இருந்து போட்டியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும்,நடிகரான ஜக்கேஷ் மற்றும் லெகர் சிங் ஆகியோர் என பாஜக சார்பில் மொத்தம் 3 பேர் வெற்றி பெற்றனர்.காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றார்.
இதனிடையே,கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஸ்ரீனிவாச கவுடா,தனது கட்சி வேட்பாளருக்கு பதிலாக காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான்:
அதைப்போல,ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் 3 இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.அந்த வகையில்,காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட ரன்தீப்சிங் சுர்ஜேவாலா,முகுல் வாஸ்னிக்,பிரமோத் திவாரி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.பாஜக தரப்பில் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கிடையில்,ராஜஸ்தானில் நடைபெற்ற எம்பி தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த சோபாராணிகுஷ்வாகா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா & ஹரியானா:
மேலும்,மகாராஷ்டிராவிலும்,ஹரியானாவிலும் விதி மீறல் புகார் காரணமாக,மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கும், ஹரியாணாவில் 2 இடங்களுக்கும் நடைபெற்ற மாநிலங்களவை எம்பிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில்,ஹரியானாவில்,பாஜகவின் கிரிஷன் லால் பன்வாரும்,பாஜகவின் ஆதரவுடன் களமிறங்கிய சுயேட்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளளது.
அதைப்போல, மகாராஷ்டிராவில் உள்ள 6 இடங்களில் பாஜக சார்பில் பியூஷ் கோயல்,தனஞ்சய் மகாதிக்,அனில் பாண்டே வெற்றி பெற்றுள்ளனர்.அதைப்போல,என்சிபி சார்பில் பிரபுல் படேலும்,சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத்தும்,காங்கிரஸ் சார்பில் இம்ரான் பிரதாப்காரியும் வெற்றி பெற்றுள்ளனர்.