10 நாட்களில் நிறைவடைந்த ராஜ்யசபா கூட்டத்தொடர்.! தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!
இன்றுடன் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கி, அக்டோபர் 1ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் தினமும் 4 மணி நேரம் நடைபெற்றன. இதில், வேளாண் மசோதா தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் எதிர்கட்சியினர் ராஜ்யசபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, மூன்றரை மணி நேரத்தில் 7 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கிடையில், கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டும் 25க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து விட மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, இன்றுடன் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். இதையடுத்து பேசிய அவை தலைவர், போராட்டம் செய்ய எதிர்க்கட்சிகளுக்கு உரிமையுள்ளது என்றும் விதிகளுக்கு உட்பட்டுத்தான் போராட்டம் நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாதபோது மசோதாக்களை நிறைவேற்ற விருப்பமில்லை. ஆனால், தற்போது அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். கடந்த 10 நாட்கள் நடைபெற்ற இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 25 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று கடைசி நாளில் தொழிலார்கள் மசோதா நிறைவேறியதை அடுத்து ராஜ்யசபா அவை இத்துடன் நிறைவு செய்வதாக வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.