காஷ்மீர், ஹரியானா., அடுத்தது மகாராஷ்டிரா தான்.! தலைமை தேர்தல் அதிகாரி புதிய தகவல்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நவம்பர் 26ஆம் தேதிக்குள் சட்டமன்ற தேர்தல் முடிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
மும்பை : 10 ஆண்டுகளுக்கு பிறகான ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தலை அடுத்து இந்தாண்டு இறுதிக்குள் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. அதற்கான முன் அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
டெல்லியில், தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் இன்று செய்தியாளர்களிடம் மகாராஷ்டிரா தேர்தல் குறித்து கூறுகையில்,”மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில், 25 எஸ்.சி தொகுதிகள் மற்றும் 29 எஸ்.டி தொகுதிகள் உள்ளன.
நடப்பில் உள்ள மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். மகாராஷ்டிராவில் மொத்த வாக்காளர்கள் 9.59 கோடி பேர் ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 4.59 கோடி பேர் மற்றும் பெண் வாக்காளர்கள் 4.64 கோடி பேர். 18 – 19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளிக்கும் நபர்கள் சுமார் 19.48 லட்சம் பேர் உள்ளனர். ” என தெரிவித்துள்ளார்.
விரைவில் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும், அதற்கான தேர்தல் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக கடந்த செப்டம்பர் 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்தன. அடுத்ததாக அக்டோபர் 1ஆம் தேதி 3ஆம் கட்ட தேர்தலில் மீதம் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
அதே போல ஹரியானா சட்டமமன்றத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.