ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!
சட்ட திருத்தங்களை நீதிமன்றங்களே செய்துவிட்டால், நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் எதற்காக என்று கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறுகிறார் எனக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும், ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆளும் திமுக அரசு வரவேற்பு தெரிவித்து இருந்தது.
இந்த தீர்ப்பு குறித்து கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால், நாட்டில் நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் எதற்காக? இருக்கின்றன? உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை ஒரு பெரிய அமர்வுக்கு பரிந்துரைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ” எல்லாவற்றையும் நீதிமன்றங்களே முடிவு செய்துவிட்டால், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேவை முடிந்துவிட்டதே. ஆளுநருக்கு எதிரான இந்த தீர்ப்பு நீதித்துறையின் அத்துமீறல். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஒரு பெரிய அமர்வுக்கு பரிந்துரைத்திருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் தங்களுக்கான வரம்புகளை மீறுகிறது.
இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க அரசியலமைப்புச் சட்டம் எந்த காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை. ஆனால், இன்று உச்ச நீதிமன்றம் ஒரு காலக்கெடு நிர்ணயித்து, அது ஒரு மாதமாகவோ அல்லது மூன்று மாதமாகவோ குறிப்பிடப்பட்டால் அது அரசியலமைப்புத் திருத்தமாக மாறிவிடும்.” என்று கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.