ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி.. பாரதீய பழங்குடியினர் கட்சி ஆதரவு.!
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெஹ்லோட் அரசு அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வரும் நிலையில், 200 பேர் கொண்ட சபையில் இரண்டு எம்.எல்.ஏக்கள் கொண்ட பாரதீய பழங்குடியினர் கட்சி ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை காங்கிரசுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், பாரதீய பழங்குடியினர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான ராஜ்குமார் ரோட் மற்றும் ராம்பிரசாத் டிண்டோர் ஆகியோர் ராஜஸ்தான் அரசுக்கு ஆதரவளிக்க அக்கட்சி உறுதியளித்துள்ளது.
பாரதிய பழங்குடியின கட்சியின் தலைவா் மகேஷ்பாய் வாசவா கூறுகையில், பழங்குடியினா் பிரச்னைகளுக்குத் தீா்வு காண முன்பு காங்கிரஸையும், பாஜகவையும் நாங்கள் எதிா்த்தோம். ஆனால், இப்போது ராஜஸ்தான் அரசு நாங்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்கு முழு ஆதரவையும் அளித்ததால், அவா்களுக்கு நாங்கள் ஏன் ஆதரவளிக்கக் கூடாது..?
இதனால், கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலின்போது காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளித்தோம். பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, சிக்கலில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிக்கக் கூடாது என்று முடிவு செய்தோம்.
பின்னர், முதல்வர் அசோக் கெஹ்லோட்உடன் நடைபெற்ற ஆலோசனையில், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கூறியதால் பாரதிய பழங்குடியின கட்சி ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளது என கூறினார்.