பதாஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு ஷர்மா.!
கொரோனில் சோதனைகளை அனுமதியின்றி செய்த பதாஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு ஷர்மா வலியுறுத்தி உள்ளார்.
பதாஞ்சலி நிறுவனம் அண்மையில் ‘கொரோனில்’ மற்றும் ‘சுவாசரி’ என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு, கொரோனா நோய் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என தெரிவித்தது. தற்போது இந்த மருந்து சர்ச்சைகளுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் பதாஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ராஜஸ்தான் சுகாதார துறை அமைச்சரான ரகு ஷர்மா கூறியுள்ளார். மேலும் இந்த மருந்துகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். ஏற்கனவே இந்த சோதனைகள் யாவும் சட்ட விரோதம் என்று ஜெய்ப்பூரில் உள்ள நிம்ஸ் மருத்துவமனைக்கு மாநில சுகாதார துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நிம்ஸ் மருத்துவமனை என்பது கொரோனா நோயாளிகளுக்கான பிரத்யேக மருத்துவமனையாகும். அங்கு அரசு நெறிமுறைகளை பின்பற்றியே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தற்போது அரசாங்கத்தின் அனுமதியின்றி நீங்கள் நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை நடத்தியுள்ளதாக தொலைக்காட்சி மற்றும் செய்திகள் வாயிலாக தெரிய வந்துள்ளது. எனவே இன்னும் மூன்று நாட்களில் இதனை குறித்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜெய்ப்பூர் சி. எம். எச். ஓ டாக்டர் நரோட்டம் சர்மா கூறியதாவது, பதாஞ்சலி ஆயுர்வேத அல்லது நிம்ஸ் சோதனை செய்வதற்கான எந்த அனுமதியும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார் .எனவே எந்த அனுமதியும் இல்லாமல் அவர்கள் எவ்வாறு மருத்துவ பரிசோதனைகளை நடத்த முடியும் என்பதை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். எந்தவொரு மருத்துவ பரிசோதனையும் நடத்த ஐந்து உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவால் அனுமதி வழங்கப்பட வேண்டும். அத்தகைய குழு எதுவும் அமைக்கப்படாத போது, அவர்கள் மருத்துவ பரிசோதனைகளை எவ்வாறு நடத்த முடியும், அது சட்ட விரோதமானது என்று சர்மா கூறியுள்ளார்.
மறுபுறமோ பதாஞ்சலி நிறுவனரான ராம்தேவ், சாந்த்வாஜியில் உள்ள நிம்ஸில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கொரோனில் மருந்து வழங்கியதாகவும், அவர்களில் 69 சதவீதம் பேருக்கு நெகட்டிவ் ஆனதாகவும், அடுத்த 7 நாட்களில் குணமடைந்ததாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே ஆயுஷ் அமைச்சகம் பதாஞ்சலி நிறுவனத்திடம் மருந்திற்கு பயன்படுத்திய பொருட்கள், சோதனை செய்த இடம், கவனிக்கப்பட்ட நெறிமுறைகள், சோதனை குழுவின் மாதிரி அளவு, நிறுவன நெறிமுறை குழு அனுமதி, இந்திய மருத்துவ பரிசோதனை பதிவின் அனுமதி, ஆய்வின் முடிவுகள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கூறியது குறிப்பிடத்தக்கது.