பிரதமர் மோடியின் ‘சாலை பயணம்’ தோல்வி.! ராஜஸ்தான் முதல்வர் கடும் விமர்சனம்.!
வரும் நவம்பர் 25 (சனிக்கிழமை) அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இதோடு, சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், தெலுங்கானா (நவம்பர் 30) ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது.
தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் பிரச்சாரங்கள் அனல் பறக்க ஆரம்பித்துள்ளன. அதுவும். ராஜஸ்தானில் ஆளும்கட்சி காங்கிரஸ். எதிர்க்கட்சி பாஜக என்பதால் முக்கிய தேசிய தலைவர்கள் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. கண்ணீரை பார்க்க காங்கிரசுக்கு நேரமில்லை.. பிரதமர் கடும் குற்றசாட்டு.!
பிரதமர் மோடி ராஜஸ்தானில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தியும், மக்களை நேரடியாக சென்று பார்த்தும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று பரன் நகரில் பிரச்சாரத்தில் பேசுகையில் கூட ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கி பேசினார்.
அவர் கூறுகையில், பாஜக இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றியுள்ளது. ராஜஸ்தான் மாநில முன்னேற்றம் இல்லாமல் இது சாத்தியமாகாது. காங்கிரஸ் அரசு எப்போதும் வாரிசு அரசியல், ஊழல், தீமைக்கு துணைபோதல் என மூன்றையும் தான் முக்கிய குறிக்கோளாக வைத்துள்ளனர். அடுத்து ரெட் டைரி வெளியே வந்தால் காங்கிரசின் பல ஊழல் முறைகேடுகள் வெளியே வரும் யாவும் விமர்சித்தார்.
ராஜஸ்தானில் கலவரக்காரர்கள் ஆளும் கட்சி ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பெண்கள் புகார் கூறினால் பொய் புகார் என கூறுகிறார்கள் என கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார் பிரதமர் மோடி.
தேர்தல் நிலவரம் குறித்து இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட், ‘ பிரதமர் மோடியின் சாலை பயணம் (Road Show) தோல்வியடைந்து விட்டது.
அந்த பயணம் வெறும் 9 கிமீ தான் நடைபெற்றது. அதற்குள் பாஜகவினர் மிகவும் பதற்றமடைந்து வெளியில் இருந்து ஆட்களை அழைத்தும் நிலை வந்துவிட்டது. அவர்கள் (பாஜகவினர்) உள்ளூர் பிரச்சினைகளை பற்றி பிரச்சாரத்தில் பேசுவதில்லை என்றும் முதல்வர் அசோக் கெலாட் கருத்து கூறினார்.